”ஓடாத படம் 100 நாள் ஓடிக்கொண்டிருக்கிறது”… ப.சிதம்பரம் கொந்தளிப்பு
தபால்துறை தேர்வில் தமிழ் நீக்கப்பட்டதை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ’ஓடாத படம் 100 நாள் ஓடிக்கொண்டிருக்கிறது’ என கருத்து தெரிவித்துள்ளார்.
தபால் துறை தேர்வில், தமிழ் மொழி நீக்கப்பட்டது குறித்து பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக-வின் அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் அரசை கவிழ்க்க பாஜக திட்டமிடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், இந்தியாவில் நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது ஜனநாயகத்தை கொலை செய்யும் ஆட்சியா ? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தபால் துறை தேர்வில் தமிழ் மொழி நீக்கப்பட்ட்டுள்ளது என்பது கண்டிக்கத்தக்கது என்றும், இந்தியை திணிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் ஒரு புது முயற்சி எடுக்கப்படுகிறது எனவும் பாஜக-வின் ஆட்சியை குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக-வின் ஆட்சி என்பது, ஓடாத படத்தை 100 நாள் ஓட்டி வைப்பது போல எனவும், ஒன்றும் செய்யாத அரசு 100 நாள் ஓடிக்கொண்டிருக்கிறது எனவும் பாஜக மீது ப.சிதம்பரம் கடும் விமர்சனத்தை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.