வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 ஜூன் 2024 (16:49 IST)

தொகுதியில் காலை கூட வைக்கல.. ஜெயிலில் இருந்தபடியே வென்ற சுயேட்சை! – யார் இந்த அம்ரித்பால் சிங்?

Amrit paul singh
மக்களவை தேர்தலில் பல அரசியல் கட்சிகளும் போட்டியிட்ட நிலையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தான் போட்டியிட்ட தொகுதிக்கு செல்லாமலே வெற்றி பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Amritpal singh


மக்களவை தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பல முன்னணி கட்சிகளும் பல இடங்களில் வெற்றிப் பெற்றிருந்தன. ஆனால் ஆச்சர்யகரமாக எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல் 7 சுயேட்சை வேட்பாளர்கள் வெவ்வேறு இடங்களில் பெரிய கட்சிகளையே வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளனர்.

அப்படியாக பஞ்சாப் மாநிலம் கதூர் சாஹிப் தொகுதியில் வெற்றி பெற்றவர்தான் அம்ரித்பால் சிங். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலாக வேட்புமனு தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களும் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் அம்ரித்பால் சிங்கோ தான் போட்டியிட்ட தொகுதியில் கூட கால் எடுத்து வைக்கவில்லை. ஆனால் எப்படி வெற்றி பெற்றார்? யார் இந்த அம்ரித்பால் சிங்?

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சீக்கிய மக்களிடையே காலிஸ்தானிய ஆதரவும் தொடர்ந்து இருந்து வருகிறது. காலிஸ்தான் என்பது ஒரு காலத்தில் சீக்கியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்தவற்றை குறிப்பதாகும். முன்னதாக கொரோனா காலத்தில் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திலும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் உள்ளீடு அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது.


அப்படியான காலிஸ்தான் அமைப்புகளில் ஒன்றான வாரிஸ் பஞ்சாப் தே அமைப்பின் தலைவர்தான் இந்த அம்ரித்பால் சிங். கடந்த 2023ம் ஆண்டில் பஞ்சாபில் உள்ள காவல் நிலையம் ஒன்றை தாக்கிய கும்பலில் சிலர் கைதானார்கள். அவர்கள் வாரிஸ் பஞ்சாப் தே அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அதை தொடர்ந்து அதன் தலைவரான அம்ரித்பால் சிங்கை தேடி வந்த போலீஸார் பிறகு அவரை கைது செய்தனர்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் அசாமில் உள்ள திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் அம்ரித்பால் இல்லாவிட்டாலும் அவரது புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவரது அமைப்பினர் வாக்குகளை சேகரித்தனர்.

தேர்தல் முடிவில் அமிரித்பா சிங் காங்கிரஸ் வேட்பாளர், ஆம் ஆத்மி வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார் சிறையில் இருந்தபடியே. இது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ள நிலையில் அம்ரித்பால் விடுதலையாகி நாடாளுமன்றம் செல்ல வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K