வேலைநிறுத்த போராட்டத்தில் திடீர் திருப்பம்: தப்பித்த வங்கி வாடிக்கையாளர்கள்
செப்டம்பர் 26, 27 ஆகிய இரண்டு தினங்கள் வங்கி அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வங்கிகள் இணைப்பை எதிர்த்து நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் வங்கி ஊழியர்கள் வேலைக்கு வந்தாலும் உத்தரவிட அதிகாரிகள் இல்லாத காரணத்தால் வங்கிப் பணிகள் முடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
குறிப்பாக ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணி முடங்கும் என்ற அச்சத்தால் செப்டம்பர் 26, 27 மற்றும் அதனை அடுத்து வரும் சனி, ஞாயிறு என நான்கு நாட்களில் ஏடிஎம்மில் பணம் இல்லாமல் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளும்படி சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
இந்த நிலையில் செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற திட்டமிட்டிருந்த வேலைநிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு ஏன் என்பது குறித்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது