ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (13:40 IST)

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது..! வினாத்தாள் கசிவைத் தடுக்க கூடுதல் கவனம் தேவை..! உச்சநீதிமன்றம்..!!

Neet SC
இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
வினாத்தாள் கசிவை தொடர்ந்து இளநிலை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
 
இந்த வழக்கில்  இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு பரவலாகவும் திட்டமிட்ட ரீதியிலும் நடைபெறவில்லை என்று தெரிவித்தனர். இதனால், தேர்வின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாகக் கூற முடியாது என்றும் இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.  
 
அடுத்த ஆண்டு இதுபோன்ற மோசமான முறையில் தேர்வு நடத்தப்படுவதைத் தவிர்க்க தேசிய தேர்வு முகமையும் மத்திய அரசும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
 
தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய அமைக்கப்பட்டுள்ள இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு தனது அறிக்கையை செப்டம்பர் 30ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

 
நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தேர்வு முறையை வலுப்படுத்தி நிலையான இயக்க நடைமுறைகளை  உருவாக்குவது குறித்து ராதாகிருஷ்ணன் குழு பரிசீலிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.