ஹரியானா முதல்வராக நயப் சைனி பதவியேற்பு..! முன்னாள் முதல்வர் வாழ்த்து.!!
ஹரியானா மாநில புதிய முதலமைச்சராக நயாப்சிங் சைனி பதவி ஏற்றுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்வராக மனோகர் லால் கட்டார் இருந்து வந்தார். ஹரியானாவில் பாஜக, ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.
இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், ஹரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பாஜக - ஜேஜேபி இடையிலான கூட்டணி முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் பதவியை மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகினர்.
இந்நிலையில் ஹரியானா மாநில புதிய முதல்வராக நயாப்சிங் சைனி பதவி ஏற்றுள்ளார். ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, நயாப் சிங் சைனிக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய முதல்வராக பதவியேற்ற நயாப் சிங் சைனி முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாரிடம் வாழ்த்து பெற்றார்.