வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (16:14 IST)

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு! முதல்வர் அறிவிப்பு

cm stalin
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.01.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
 
''மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
 
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
 
அவ்வகையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.
 
இந்தஅகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய்.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான  கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.