நள்ளிரவில் தீ பிடித்து எரிந்த தேர்; விஷமிகளின் செயலா? – ஆந்திராவில் பதட்டம்!
ஆந்திராவில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் தேர் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்க கோதாவரி மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில். இங்கு பல ஆண்டுகள் பழமையான தேர் ஒன்றும் உள்ளது. கொட்டகை அமைத்து பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்த தேர் திடீரென நேற்று நள்ளிரவில் தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கு உடனே கூடி தங்களால் இயன்றவரை தீயை அணைக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்த அவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். ஆனால் தேர் முழுவதும் எரிந்து சாம்பலானதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தேர் திடீரென தீப்பற்றியதற்கு விஷமிகள் யாராவது காரணமா என்ற ரீதியிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.