திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 ஏப்ரல் 2021 (10:00 IST)

டாக்டருக்கு சிவப்பு.. காய்கறிக்கு பச்சை.. லவ்வரை பாக்க எந்த கலர்? – இளைஞருக்கு காவல்துறை பதில்!

மும்பையில் தனது காதலியை பார்க்க செல்ல வாகனத்தில் எந்த நிற ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என இளைஞர் கேட்ட கேள்விக்கு மும்பை போலீஸ் அளித்துள்ள விளக்கம் வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மாநில வாரியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மும்பை மாநகரிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் வாகனங்கள் அவசியம் இன்றி வெளியே வர கட்டுப்பாடுகள் உள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களின் வாகனங்கள் சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டி செல்லவும், காய்கறி, அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் பச்சை ஸ்டிக்கர் ஒட்டி செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பை போலீஸிடம் ட்விட்டர் வாயிலாக கேள்வி எழுப்பிய இளைஞர் ஒருவர் “நான் என் காதலியை பார்க்க செல்ல எந்த கலர் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். அவளை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன்” என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள காவல்துறை “உங்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எங்கள் உடனடி தேவைகளுக்கான பட்டியலில் இந்த தேவைக்கு இடம் இல்லை. இந்த தூரம் உங்கள் காதலை அதிகப்படுத்தும் அதுபோல் மேலும் ஆரோக்கியமாக்கும். வாழ்நாள் முழுவதும் நீங்கள் இருவரும் ஒன்றாக வாழ வாழ்த்துகிறோம். இது ஒரு இக்கட்டான காலகட்டம்.” என பதிலளித்துள்ளனர்.