புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2019 (18:53 IST)

போலீஸாரிடம் தகராறு செய்யும் மக்கள் – அபராதத்தை குறைத்தது அரசு

போக்குவரத்து விதிமீறலுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் மக்கள் போலீஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் அபராத தொகையை குறைத்துள்ளது குஜராத் அரசு.

நாடெங்கிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதத்தை அதிகரிக்கும்படி மோட்டார் வாகன சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்தது மத்திய அரசு. இதன்படி அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள் எக்கசக்கமாக இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டினர். இதனால் நாடு முழுவதும் பல இடங்களில் போக்குவரத்து போலீஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையே சண்டை, சச்சரவுகள் உண்டாகின.

மக்கள் சிலர் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் விதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்து கொள்ளலாம் என கூறி அவர் நழுவிக் கொண்டார்.

பொது இடங்களில் ஏற்படும் சச்சரவை தவிர்க்கும் பொருட்டு குஜராத் அரசு அபராத தொகையை குறைத்து கொண்டுள்ளது. ஹெல்மெட் அணியாவிட்டால் 1000 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாயும், லைசென்ஸ் இல்லாவிட்டால் 5 ஆயிரத்திற்கும் பதிலாக இரண்டாயிரம் ரூபாயும் பராதம் விதித்துள்ளனர்.

இதுபோல பிரச்சினைகள் ஏற்படலாம் என நினைத்த சில மாநிலங்கள் இன்னும் புதிய அபராத விதிமுறையை நடைமுறைப்படுத்தவே இல்லை. தற்போது புதிய அபராத விதிமுறை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் முன்னர் அதை குறைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.