சுழன்று கொண்டே உயரத்தில் இருந்து விழுந்த ராட்டினம்! – பஞ்சாபில் கோர விபத்து!
பஞ்சாபில் கண்காட்சி ஒன்றில் ராட்டினம் உயரத்தில் இருந்து விழுந்ததில் மக்கள் தூக்கிவீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கண்காட்சி ஒன்று நடந்து வருகிறது. இந்த கண்காட்சிக்கு சென்ற மக்கள் பலரும் பலவித ராட்டினங்களில் ஏறி பயணித்து மகிழ்ந்து வந்தனர். அங்கு உயர சென்று கீழே இறங்கும் வட்டவடிவ ராட்டினம் ஒன்றில் பலர் ஏறியுள்ளனர்.
சுழன்று கொண்டே தூணில் மேலே ஏறிய ராட்டினம் திரும்ப இறங்கும்போது அச்சு முறிந்ததால் சுழன்று கொண்டே வேகமாக வந்து தரையில் மோதியது. இதனால் ராட்டினத்தில் இருந்த பலர் தூக்கிவீசப்பட்ட நிலையில் பலரும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.