புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (12:30 IST)

சிறைக்கு பயந்து சலாம் போடும் அதிமுக: ஸ்டாலின் சாடல்!!

பாஜகவை எதிர்க்க அஞ்சி, அதிமுக மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஆதரித்து வருகிறது என சாடியுள்ளார் முக ஸ்டாலின். 
 
எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து பின்வருமாறு பேசினார், ஆட்சி போய்விட்டால் சிறைக்குச் செல்ல நேரிடும் என அஞ்சியே பாஜ அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் உட்பட அனைத்தையும் எடப்பாடி அரசு ஆதரிக்கிறது. 
 
ஏதோ வாக்கு வங்கிக்காக நாங்கள் அலைந்து கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள், நாங்கள் வாக்கு வங்கிக்காக அலைகிறோம் என்று வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும், நீங்கள் இதற்கு வக்காலத்து வாங்குவதற்கு என்ன காரணம்? 
 
பாஜக ஆட்சிக்கு அஞ்சி, நடுங்கி, கைகட்டி, வாய் பொத்தி, ஆட்சி உடனே போய்விடும் என்று பயந்துதானே? ஆட்சி போய்விட்டால், சிறைக்குச் செல்ல நேரிடும் என அஞ்சுகிறார்கள். காரணம் இவர்களின் வண்டவாளங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் சிக்கி இருப்பதால்.
 
எனவே எல்லாவற்றிற்கும் பயந்து கொண்டு, அவர்கள் கூறுவதையெல்லாம் கும்பிட்டு, அவர்கள் காலில் விழுந்து ஏற்றுக் கொள்கிறார்களே தவிர, மக்களைப் பற்றி இவர்கள் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை என விமர்சித்துள்ளார்.