சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார். மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் நீட் தேர்வு முறைகேடு புயலை கிளப்பி வருகிறது. நீட் தேர்வு முறைகேடு குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.
இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசும் அளித்து இருந்தன. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவற்றை நிராகரித்ததுடன், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சினை குறித்து பேசலாம் என தெரிவித்தார். ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் நீட் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.
இந்தநிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி முழக்கத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் அரசியல் ஆதாயத்துக்காக சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.