திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (12:19 IST)

பாஜகவிலும் நேர்மையற்றவர்கள் உள்ளனர்: வெளிப்படையாக சொன்ன மத்திய அமைச்சர்!

பாஜகவிலும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் நேர்மையற்றவர்கள் இருப்பதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக நாடு முழுவதும் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் மற்றும் பல நிறுவன உரிமையாளர்களிடம் வருமானவரித்துறை அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. இது குறித்து பலர் பேசும்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு தங்களுக்கு எதிராக பேசுபவர்கள் மற்றும் எதிர்கட்சிகள் மீது வருமானவரி சோதனையை ஏவுவதாக எதிர்கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிப்பட தொடங்கியது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ”அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்கட்சியினர் வீடுகள் சோதனையிடப்படுவதாக பேசுவது தவறான கருத்து. இனி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதி வீடுகளிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட வேண்டும். கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வெற்றி பெறும் அரசியல்வாதியிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்.” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தற்போது அரசியல் வியாபாரம் ஆகிவிட்டதாகவும், அந்த வியாபாரத்தில் பாஜகவும் சேர்ந்து விட்டதாகவும், 25 சதவீதம் மட்டுமே நல்ல அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக அமைச்சரின் இந்த கருத்து அவரது சொந்த கருத்தா? அல்லது பாஜக கட்சிக்குள்ளேயே களையெடுப்பு நிகழ்த்த போவதற்கான அறிகுறியா? என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.