திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (09:57 IST)

ஏர்டெல் மற்றும் வோடஃபோன்: நள்ளிரவுக்குள் ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது ஏன்? - விரிவான தகவல்கள்

ஏர்டெல் மற்றும் வோடஃபோன்: நள்ளிரவுக்குள் ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது ஏன்
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
 
தினத்தந்தி: "நள்ளிரவுக்குள் ரூ.1.47 லட்சம் கோடி "
 
வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் நள்ளிரவுக்குள் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி செலுத்துமாறு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டதின் பின்னணி என்ன என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகைகளில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை நள்ளிரவுக்குள் செலுத்துமாறு சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவு, அந்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை அலற வைத்து விட்டது.
 
இப்படி ஒரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதின் பின்னணி இதுதான்.
 
தொலைத்தொடர்பு துறை சில நாட்களுக்கு முன்னர் பிறப்பித்த உத்தரவு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி உச்சநீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டது ஆகும்.
 
இந்த உத்தரவை வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதிக்குள் ஏற்று செயல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவை செயல்படுத்தவில்லை.
 
இதில் முக்கிய அம்சம், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் அந்த தொகையை செலுத்துமாறு வலியுறுத்த வேண்டாம், செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டாம் என தொலை தொடர்பு துறை டெஸ்க் அதிகாரி ஜனவரி 23-ந் தேதி ஒரு உத்தரவை (சுற்றறிக்கை) அனுப்பி உள்ளார்.
 
இந்த நிலையில், சம்மந்தப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நீதிபதி அருண் மிஷ்ரா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, இந்த உத்தரவு (சுற்றறிக்கை) சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு வந்தது.
 
அப்போது தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக சுற்றறிக்கை அனுப்பிய தொலை தொடர்புதுறை டெஸ்க் அதிகாரிக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.
 
அப்போது நீதிபதி அருண் மிஷ்ரா, தொலை தொடர்பு துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை பார்த்து கோபத்துடன் கூறியதாவது:-
 
அப்படியென்றால் நாம் சுப்ரீம் கோர்ட்டை மூடி விடலாம். இந்த நாட்டில் எந்த சட்டமும் இல்லை. நாங்கள் மிகவும் வருத்தம் அடைகிறோம். இந்த அமைப்பில் நான் வேலை செய்யக்கூடாது என்று உணர்கிறேன். இந்த முட்டாள்தனமான செயலுக்கு பின்னால் இருப்பது யார்?
 
உங்கள் துறையில் உள்ள சாதாரண டெஸ்க் அதிகாரி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி, அவர்கள் (தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள்) யாரும் பணம் செலுத்த வேண்டாம், அவர்களை நிர்ப்பந்திக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உத்தரவிட்டிருக்கிறார்.
 
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு அவர் எழுத்துப்பூர்வமாக எப்படி தடை போட முடியும்? என்ன துணிச்சல் இது? இதற்காக நீங்கள் (அரசு) ஒரு முறை அவரை கேள்வி கேட்டது உண்டா?
 
இந்த முட்டாள்தனமான செயலுக்கு பின்னால் உள்ள டெஸ்க் அதிகாரி தன்னை சுப்ரீம் கோர்ட்டு என்று கருதுகிறாரா? இது முற்றிலும் அவமதிப்பு. 100 சதவீதம் அவமதிப்பு.
 
இந்த உத்தரவை உங்கள் டெஸ்க் அதிகாரி அடுத்த ஒரு மணி நேரத்தில் அல்லது 30 நிமிடங்களில் திரும்பப்பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர் இன்றைக்கே சிறைக்கு போக வேண்டியது வரும். உடனடியாக அதை திரும்பப்பெறுங்கள். அவர் இங்கே வர வேண்டும்.
 
இதைத் தொடர்ந்து நீதிபதி அருண்மிஷ்ராவிடம் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "உங்கள் தயாள குணத்தை நாங்கள் அனைவரும் அறிந்திருக்கிறோம்" என கூறி அமைதிப்படுத்த முயன்றார்.
 
அப்போது நீதிபதி அருண் மிஷ்ரா, "இல்லை.. நீங்கள் என்னை ஒரு அங்குல அளவுக்கு கூட அறிந்திருக்கவில்லை. இந்த உலகில் யாரிடம் இருந்தும் நாங்கள் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நான் என்னைப் பற்றி கவலைப்படவில்லை. உள்ளபடியே சொல்கிறேன், இந்த நாட்டில் வாழாமல் இருப்பது நல்லது. இந்த டெஸ்க் அதிகாரி அரசியலமைப்பு அதிகாரிகளை மீறி எழுதுகிறார். தடை வழங்குகிறார். இந்த நாட்டின் நீதி அமைப்பே எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது" என்று கூறினார்.
 
இதையடுத்துதான் தொலை தொடர்பு துறை உடனடியாக நேற்று முன்தினம் செயல்பட்டது. அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. தனது டெஸ்க் அதிகாரி பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற்றது. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை அன்று நள்ளிரவுக்குள் (நேற்று முன்தினம்) செலுத்தியாக வேண்டும் என்று உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவு, தொலைத்தொடர்பு நிறுவனங்களை அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது.
 
இந்த தொகையை வோடோஃபோன் நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் இன்னும் சில தினங்களில் செலுத்த இருப்பதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
 
சீனாவில் இருந்தும், கொரோனா பாதிப்புள்ள மற்ற நாடுகளில் இருந்தும் தில்லி திரும்பிய 17 பேருக்கு 'கொவைட் 19' (கொரோனா வைரஸ்) பாதிப்பு அறிகுறி இருப்பதாக டெல்லி சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
 
டெல்லி சுகாதாரத் துறையால் வெளியிட்டப்பட்ட தரவுகளின்படி, டெல்லி விமான நிலைய அலுவலர்கள் அளித்தத் தகவலின்பேரில், பிப்ரவரி 13 வரை 5,700-க்கும் மேற்பட்ட பயணிகள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து டெல்லி சுகாதாரத் துறையின் மூத்த அலுவலர் தெரிவிக்கையில், "இதில், 4,707 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்பது தெரியவந்தது. அவர்களை வீட்டிலேயே தனிமைப்பட்டு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அதேசமயம், 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரவுகளின்படி, இன்னும் கண்டறியப்படாத பயணிகளின் எண்ணிக்கை 817 ஆக உள்ளது. கண்காணிப்பில் உள்ள பயணிகளின் எண்ணிக்கை 68 ஆக உள்ளது.
 
யாருக்கேனும் காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டும். விமான நிலையங்களில் கண்காணிப்புப் பணி நடைமுறை தொடங்கப்படுவதற்கு முன்பும், ஜனவரி 15 மற்றும் ஜனவரி 15-க்குப் பிறகும், தில்லியில் இருந்து சீனா மற்றும் பிற நாடுகளுக்குப் பயணித்து மீண்டும் தில்லி திரும்பிய பயணிகளைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.
 
டெல்லி விமான நிலையம் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 21 விமான நிலையங்களிலும் சீனா, ஹாங்காங், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் கண்காணிக்கும் நடைமுறை ஜனவரி 17 தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்து தமிழ் திசை: "'வட்டிக் குறைப்பின் பலனை விரைவில் காணலாம்': சக்திகாந்த தாஸ்"
 
'வட்டிக் குறைப்பின் பலனை விரைவில் காணலாம்' என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 'கடன் வழங்குதல் வளர்ச்சி காண தொடங்கியுள்ளது. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட வட்டிக் குறைப்பினால் கடன் வழங்குதல் மேலும் வளர்ச்சி காணும்' என்று தெரிவித்தார்.
 
வட்டிக் குறைப்பு பலனளிக்கவில்லை என்பதை ஏற்க முடியாது என்று கூறிய அவர், வட்டிக் குறைப்பு, மெதுவாக பலனளிக்கத் தொடங்கியுள்ளது. வரும் மாதங்களில் கடன் வழங்கும் அளவு அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
 
நடப்பு நிதி ஆண்டின் கடைசி நிதிக் கொள்கை கூட்டம் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. முந்தைய அளவான 5.15 சதவீதமே தற்போதும் தொடரும் என்று ஆர்பிஐ அறிவித்தது.
 
பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய கூட்டத்திலும் வட்டி விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டில் தொடர்ச்சியாக 5 முறை வட்டி விகிதத்தைக் குறைத்தது. கிட்டத்தட்ட 135 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டது. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட வட்டிக் குறைப்பை வங்கிகள் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் வட்டிக் குறைப்பின் பலன்கள் மக்களைச் சென்றடையவில்லை.
 
இந்நிலையில் தற்சமயம் வட்டிக் குறைப்பு பலனை முழுமையாக மக்களிடம் சென்று சேர்க்கும் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாகவே வட்டிக் குறைப்பின் பலனை விரைவில் காணலாம் என்று கூறியுள்ளார்.
 
ஜூலை முதல் ஜூன் வரையிலான ஓராண்டு ரிசர்வ் வங்கிக்கான நிதி ஆண்டாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் நிதி ஆண்டான ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தையே ரிசர்வ் வங்கிக்கும் நிதி ஆண்டாக பின்பற்ற திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.