தண்ணீர் பிரச்சனையை விட காவி ஜெர்ஸி பிரச்சனை பெரிதா? கேள்வி எழுப்பிய முன்னாள் முதல்வர்!
சென்னையில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் காவி நிற பிரச்சனைக்கு முக்கியத்துவம் தருவது தேவையா? என ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை தண்ணீர் பிரச்சனை தற்போது உலக அளவில் பெரிதாகிவிட்டது. நாசா சென்னை ஏரிகளை படம்பிடித்து தண்ணீர் பிரச்சனையை தெரிவித்துள்ளது. டைட்டானிக் ஹீரோ உள்பட பலர் சென்னையின் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசி வருகின்றனர்.
ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகளும் பிரபலங்களும் தண்ணீர் பிரச்சனை குறித்த ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவைகளை நடத்தி விளம்பரம் தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி தண்ணீர் பிரச்சனையை விட 'ஒரே நாடு ஒரே ரேஷன்', கிரிக்கெட் அணிக்கு காவி நிற ஜெர்ஸி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது, 'தண்ணீர் பிரச்சினை சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்து வருவதாகவும் அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பாக சென்னை நகரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நாம் கிரிக்கெட் அணியின் சீருடை குறித்து பேசி நிறம் விஷயத்தில் நாம் நமது முழு ஆற்றலை செலவிடுகிறோம் என்றும் வருத்தத்துடன் கூறினார்.