சீஸ்க்கு பதிலாக எண்ணெய்யை கலந்து ஏமாற்றிய McDonalds!? – லைசென்ஸை கேன்சல் செய்து அதிரடி!
மகாராஷ்டிராவில் பிரபல மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் சீஸ்க்கு பதிலாக வெஜிடபிள் எண்ணெய்யை கலந்து வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக குறிப்பிட்ட கிளையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்களிடையே துரித மேற்கத்திய உணவுகள் மிகவும் பிரபலமாக உள்ளன. அவ்வாறாக பிரபலமாக உள்ள பீட்சா, பர்கர், சாண்ட்விச் உள்ள உணவுப்பொருட்களில் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவகங்களும் சீஸ் கலந்த உணவுப்பொருட்களின் பெயரிலேயே சீஸ் பீட்சா , சீஸ் பர்கர் என குறிப்பிட்டுதான் விற்கின்றன.
அவ்வாறாக மகாராஷ்டிராவில் உள்ள புகழ்பெற்ற மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் விற்கப்பட்ட சீஸ் உணவுகளில் சீஸே இல்லை என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் அகமத்நகரில் உள்ள மெக்டொனால்ட் கிளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு சீஸ்க்கு பதிலாக வெஜிடெபிள் எண்ணெய்யை பயன்படுத்தி சீஸ் போல காட்டியதாகவும், ஆனால் மெனுவில் சீஸ் என்றே குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. சீஸ் இருப்பதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக உணவு பாதுகாப்புத்துறை இதை கருதியது.
இதுகுறித்து மெக்டொனால்ட்ஸிடம் விளக்கம் கோரியிருந்த நிலையில் அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி தரவில்லை என சொல்லி உணவு பாதுகாப்புத்துறை அந்த குறிப்பிட்ட கிளையின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. மேலும் மற்ற கிளைகளில் இதுபோல செய்யப்படுகிறதா என்றும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K