4 மாதம் குறைகிறது எம்பிபிஎஸ் படிப்பு: இந்த ஆண்டு முதல் அமல்
எம்பிபிஎஸ் படிப்பின் காலம் இதுவரை 54 மாதங்கள் என்று இருந்த நிலையில் இனி அது 50 மாதமாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளதால் மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்பின் காலம் தற்போது 54 மாதங்களாக உள்ள நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் அது 50 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டில் 13 மாதங்களும், 2ம் ஆண்டில் 11 மாதங்களும், 3ம் ஆண்டு 12 மாதங்களும், 4ஆம் ஆண்டு 14 மாதங்களும் பாடத்திட்டங்கள் செயல்படும்
அதேபோல் பாடத்திட்டத்தை பொறுத்த வரையில், இனி ஒவ்வொரு பாடத்திற்கும் 2 தாள்கள் இருக்கும் என்றும், ஒவ்வொரு தாளுக்கும் எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு, செய்முறை பயிற்சித் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது
மேலும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2 தாள்களின் எழுத்துத் தேர்வுக்கு 200 மதிப்பெண்களும், செய்முறைப் பயிற்சி, வாய்மொழித் தேர்வு அல்லது கிளினிக்கல் தேர்வுக்கு 100 மதிப்பெண்ணும் என மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் ஆண்டில் கற்பிக்கப்பட்ட தடயவியல் மருத்துவம் மூன்றாம் ஆண்டில் சேர்க்கப்படுவதாகவும், ஒவ்வொரு மாணவரும் தேர்ச்சி பெற எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைப் பயிற்சி தேர்வு ஆகியவற்றில் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த புதிய மாற்றம் என்றும் முந்தைய ஆண்டு மாணவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது என்றும் அகில இந்தியமருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.