விளக்கேற்ற சொன்னால் துப்பாக்கியால் சுட்ட பாஜக பிரமுகர் – கட்சியில் இருந்து சஸ்பெண்ட் !
நேற்று முன் தினம் இரவு பிரதமர் மோடி அறிவித்த விளக்கு ஏற்றும் நிகழ்வில் துப்பாக்கியால் சுட்ட பாஜக பெண் ஒருவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி ஏப்ரல் 5 (நேற்று முன் தினம்) இரவு 9 மணிக்கு மின்விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றும்படியும், டார்ச் லைட் அடிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதன் படி நேற்று இந்தியா முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்தனர். ஆனால் அதுமட்டும் இல்லாமல் பட்டாசுகளை வெடித்தல் மற்றும் கூட்டமாக சேருதல் ஆகிய வேண்டதகாத செயல்களையும் செய்தனர்.
இதன் உச்சகட்டமாக உத்தரப்பிரதேசம் மாநிலம் பால்ராம்புர் மாவட்டத்தின் பாஜக மகளிரணி தலைவரான மஞ்சி திவாரி துப்பாக்கியால் சுட்டு அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார். அவரது செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அவரது பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் போலிஸாரும் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர் வீட்டுக்கு வெளியே அனைவரும் பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்ததால் உற்சாகமாகி தீபாவளி என்று நினைத்து துப்பாக்கியால் சுட்டேன் எனக் கூறியுள்ளார்.