வழக்கை ரத்து செய்றோம்.. எங்க கட்சியில சேருங்க! – மணிஷ் சிசோடியாவிற்கு பாஜக தூது??
ஊழல் வழக்கு பதவு செய்யப்பட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனக்கு பாஜக தூது அனுப்பியுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தியது. அந்த கொள்கையில் சட்ட விரோதமாகவும், அனுமதி பெறாமலும் பல விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தனக்கு ஆதரவான மது நிறுவனங்களுக்கு டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ரகசியமாக ஆதாயம் பெறும் ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 14 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மணிஷ் சிசோடியா கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மணிஷ் சிசோடியா ட்விட்டரில் இட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர் “எனக்கு பாஜகவிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது. ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தால் அத்தனை வழக்குகளையும் முடித்து வைப்பதாக கூறுகிறார்கள். பாஜகவுக்கு என்னுடைய பதில் என்னவென்றால் நான் ஒரு ராஜபுத்திரன். என் தலையை துண்டித்தாலும் யாருக்கும் அஞ்சமாட்டேன். ஊழல்வாதிகளுக்கு அடிபணிய மாட்டேன். என் மீதான வழக்குகள் பொய்யானவை. உங்களால் என்ன செய்யமுடியுமோ செய்து கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.