திங்கள், 4 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (10:51 IST)

மறுபடியும் போராட்டம்.. டெல்லி நோக்கி விவசாயிகள்! – டெல்லியில் பலத்த பாதுகாப்பு!

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டில் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக விவசாயிகள் போராடம் நடத்திய நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது.

பின்னர் விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று சில வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வது குறித்த வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது.

பிரதமர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் போராட்டக்காரர்கள் டெல்லிக்குள் நுழையாமல் இருக்க டெல்லி எல்லையில் சிமெண்ட் தடுப்பு சுவர்கள் போன்றவை அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.