ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஒரு பெண் மருத்துவரா? சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்..!
டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷஹீனா ஷாஹித் என்ற பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு ஆள்சேர்ப்பு மற்றும் தலைமை பொறுப்பை வகித்தவர் என்று டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசாரின் சகோதரி சாதா அசாரின் தலைமையில் செயல்படும் இந்த பிரிவுக்கு ஷஹீனா தலைமை தாங்கியுள்ளார். ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மருத்துவர் முஜம்மில் கணாய் என்பவருடன் ஷஹீனா நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார்.
ஷஹீனாவின் காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், முஜம்மில் வாடகைக்கு எடுத்திருந்த இடத்தில் 350 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.
ஷஹீனா ஷாஹித் கைது செய்யப்பட்டதன் மூலம், ஜெய்ஷ்-இ-முகமது இந்திய வலைப்பின்னல் குறித்த முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva