வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (15:27 IST)

நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.! மத்திய அரசுக்கு கேரள முதல்வர் மீண்டும் வலியுறுத்தல்.!

Binaray Vijayan
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
 
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய   முதல்வர் பினராயி விஜயன்,   மீட்புப்பணியில் ராணுவத்தின் முயற்சியை பாராட்டுகிறேன் என்றார். 
 
நிலச்சரிவு உண்டான இடங்களில் மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்பதற்கு இயந்திரங்களை கொண்டு வருவது கடினமாக இருந்தது என்றும் அதேபோல் ராணுவம் அமைத்து வரும் பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
 
சாலியாற்றில் அதிக சடலங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர்,  நிலச்சரிவில் மீட்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். மனிதர்கள் மட்டுமின்றி, ஏராளமான விலங்குகளும் பேரிடரில் உயிரிழந்துள்ளதாகவும், அவற்றை எல்லாம் முறையாக புதைக்க வேண்டும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டார். 
 
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும்  ஆனால், இன்னும் அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதனை அறிவிக்க, எது தடையாக இருக்கும் என்பதை மத்திய அரசு தான் சொல்ல வேண்டும் என்று பினராயி விஜயன் கூறினார்.