திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு.! 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்.!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், நடந்த தவறுக்கு 11-நாள் பரிகார தீட்சை நடத்தி ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்கப்போவதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வரான சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஜெகன்மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதால் ஏற்பட்ட கலங்கத்தைப் போக்க பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வைக்கும்படி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதற்கு பரிகாரமாக விரதமிருந்து சுவாமியை வழிபடப் போவதாக ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை விஜயவாடாவில் அமைந்துள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலில் 11-நாள் பிராயச்சித்த தீக்ஷை என்ற பெயரில் விரதத்தை தொடங்கினார்.
கோயில் படிகளை சுத்தம் செய்யும் பணிகளில் பக்தர்களுடன் அவர் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.