செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஜூன் 2020 (08:23 IST)

ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளாத மாணவி: விரக்தியில் தற்கொலை!

கேரளாவில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் விரக்தியடைந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு தேவிகா என்ற மகள் உள்ளார். 14 வயதான தேவிகா 10ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிகள் ஊரடங்கால் மூடபட்டுள்ளதால் ஆன்லைன் வழி கல்வி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. தேவிகா வீட்டில் ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதிகள் கிடையாது என்பதால் அவரது பள்ளி நடத்திய ஆன்லைன் வகுப்பில் தேவிகாவால் கலந்துகொள்ள முடியவில்லை.

இதனால் விரக்தி அடைந்த தேவிகா நேற்று மாலை திடீரென மாயமாகியுள்ளார். தொடர்ந்து தேடியபோது அருகே இருந்த ஆளிள்ளா வீடு ஒன்றில் எரிந்து சடலமாக கிடந்துள்ளார். அவருக்கு அருகே மண்ணெண்ணெய் கேனும் கிடந்துள்ளது, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறப்பதற்கு முன்பு தேவிகா எழுதிய தற்கொலை கடிதமும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறையிடம் தேவிகாவின் தந்தை கூறும்போது ”ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தேவையான வசதிகள் எங்கள் வீட்டில் இல்லை. தொலைக்காட்சியையாவது சரி செய்து தரும்படி தேவிகா கேட்டார். ஆனால் ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாததால் என்னால் அதை கூட சரிசெய்ய முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து அறிந்த கேரள கல்வித்துறை அமைச்சர் தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாது என்பதால் ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய வேண்டும் என மாணவர் அமைப்புகள் பல கேரளாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.