வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஜூன் 2020 (08:01 IST)

இன்று கரையை கடக்கிறது ‘நிசர்கா’ – பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள நிசர்கா புயல் இன்று கரையை கடக்க இருப்பதால் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஜூன் முதல் தொடங்கும் தென்மேற்கு பருவ மழையினால் கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட தென்மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்கள் மழை பெறுகின்றன. இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவ மழை ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்து தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளது.

’நிசர்கா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே இன்று கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும், பல இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.