துரத்தி சென்ற சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் – தண்ணீரில் குதித்து உயிரைவிட்ட சிறுவன்
காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் துரத்தியதால் பயந்துபோய் தண்ணீரில் குதித்த சிறுவன் இறந்துபோன சம்பவம் காஷ்மீர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னரே தெரிய வந்தால் காஷ்மீர் மக்களாலும், பாகிஸ்தான் ராணுவத்தாலும் பிரச்சினை ஏற்படலாம் என கருதிய இந்திய அரசு இதை செயல்படுத்தும் வரை ரகசியம் காத்து வந்தனர். காஷ்மீர் பகுதிகளில் மட்டும் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காஷ்மீரில் டிவி, இனைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
அன்று ஸ்ரீநகர் பகுதியில் ஒசைப் அல்டஃப் என்ற 11ம் வகுப்பு சிறுவன் தன் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்திருக்கிறான். இந்த உச்சநிலை விவாகரங்கள் எதுவும் தெரியாமல் ஒரு மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை அங்கிருந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் துரத்தியிருக்கின்றனர். பதறிப்போய் ஓடிய சிறுவர்களை ஒரு பாலத்தின் எதிர்முனையில் இன்னொரு வீரர்கள் படை வழிமறிக்க “ஏதாவது செய்து விடுவார்களோ” என்ற பயத்தில் சிறுவர்கள் ஆற்றில் குதித்துவிட்டனர்.
அதை பார்த்த சில தொழிலாளிகள் உடனடியாக நீந்தி சென்று இரண்டு சிறுவர்களை காப்பாற்றினர். ஒசைப் அல்ட்ஃப் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடற்கூராய்வு தகவலில் அவர் உடலில் 13 இடங்களில் பெல்லட் குண்டுகள் தாக்கியதற்கான அடையாளம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஊடகங்களிடம் பேச மருத்துவ நிர்வாகம் மறுத்திருக்கிறது.
ஒசைஃபின் அப்பா முகமது அல்டஃப் மராஸி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தன் மகனின் மரணம் குறித்து அவர் “எனது மகனுக்கு கிரிக்கெட் என்றால் ரொம்ப பிடிக்கும். 11வதுதான் படித்து வருகிறான். அவன் விளையாட போனபோது எங்கள் பகுதியில் உச்சநிலை அறிவிப்புகள் கூட எதுவுமில்லை. டிவி, ரேடியோக்கள் துண்டிக்கப்பட்டதால் எங்களுக்கே தாமதமாகதான் காஷ்மீர் மசோதா பற்றி தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா என தெரியவில்லை. என் மகனின் சாவுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை” என்று கண்ணீர் விட்டிருக்கிறார்.
மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் மட்டும் குண்டுகள் துழைக்கப்பட்டு பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது முதல் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது குறித்து எந்த செய்தியும் வெளிவரவில்லை.