வெள்ளத்தில் மிதக்கும் கர்நாடகம்: மீட்க விரைந்த எடியூரப்பா
தென்மேற்கு பருவமழையால் கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. வடக்கு கர்நாடகா பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல ஊர்கள் மூழ்கியுள்ளன.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நதியின் அபாய அளவையும் தாண்டி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. கிருஷ்ணா நடியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அலமட்டி, நாரயணபுரா அணைகளில் இருந்து வினாடிக்கு 7 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
பெலகா பகுதியில் ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பு படையினர் படகுகள் மூலம் காப்பாற்றி வருகின்றனர். மேலும் விடாது பெய்யும் மழையால் பல மாநிலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி சென்றிருந்த எடியூரப்பா பேரிடர் மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளார். புதிய ஆட்சி அமைத்தும் இன்னும் மந்திரிகள் நியமிக்கப்படாததால் பேரிடர் மேலாண்மையை கை கொள்வதில் நிறைய சிக்கல்கள் எழுந்துள்ளது.