செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (18:22 IST)

கேரளா சென்ற எடியூரப்பா: சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள்!

கோவில்களில் வழிப்படுவதற்காக கேரளா சென்ற எடியூரப்பாவை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பாஜக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கேரளாவில் உள்ள கன்னூர் பகுதிக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளார் எடியூரப்பா. கன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.எஃப்.ஐ மற்றும் டி.ஒய்.ஐ.எஃப் மாணவ அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு வாகனங்களுடன் கன்னூரில் சென்று கொண்டிருந்த எடியூரப்பாவை போராட்டக்காரர்கள் திடீரென உள்ளே நுழைந்து சுற்றி வளைத்தனர். எடியூரப்பாவின் காரை சுற்றி நின்று “Go Back” என்ற முழக்கத்தை முன்வைத்து காரில் கொடிகளை வைத்து தட்டி இருக்கின்றனர்.

உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து பேசியுள்ள காவல் அதிகாரிகள் முதல்வர் சென்ற வாகனத்துக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் கர்நாடக முதல்வரின் கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.