புல்லட் ரயிலின் வேகம் மணிக்கு 280 கிமீ.. சென்னையில் இருந்து மதுரைக்கு 2 மணி நேரம் தான்...
இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அதிவேக 'புல்லட் ரயில்' திட்ட பணிகள் பெங்களூருவில் உள்ள BEML மையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதைக்காகத் தயாராகும் இந்த ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்து, அதன் கட்டமைப்புப் படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புல்லட் ரயில் மணிக்கு 280 கி.மீ சோதனை வேகத்திலும், 249 கி.மீ இயக்க வேகத்திலும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 202 மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயிலில் 8 பெட்டிகள் இருக்கும். இதில் 7 சாதாரண வகுப்பு பெட்டிகளும், 1 எக்சிகியூட்டிவ் வகுப்பு பெட்டியும் அடங்கும். ஒரே நேரத்தில் 557 பயணிகள் வரை இதில் பயணிக்க முடியும்.
பயணிகளின் வசதிக்காக வைஃபை , எல்.சி.டி திரைகள், மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள், நவீன பயோ டாய்லெட்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காற்றியக்கவியல் வடிவமைப்பு மூலம் சத்தம் மற்றும் காற்று எதிர்ப்பைக் குறைக்கவும், மின்சாரத்தைச் சேமிக்கும் மறுசுழற்சி பிரேக்கிங் சிஸ்டமும் இதில் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த அதிவேக ரயில் முயற்சி, உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

