இந்தியாவுக்குள் மெல்ல நுழைகிறதா கொரோனா? – மக்கள் அதிர்ச்சி!

Prasanth Karthick| Last Modified திங்கள், 27 ஜனவரி 2020 (12:39 IST)
இந்தியாவில் சில மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுகான் மாநிலத்தில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் வுகான் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 12 நகரங்களில் விமானம், ரயில் மற்றும் பேருந்து என அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸால் பலியாகி உள்ளவர்களின் எண்ணிக்கை 40 ஐ தாண்டியுள்ள நிலையில், சீனா அவசர அவசரமாக ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் அளவில் மருத்துவமனை ஒன்றை அமைத்து வருகிறது. சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு வரும் பயணிகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றனர்.

வுகானில் 250 இந்தியர்கள் வெளியேற முடியாமல் உள்ள நிலையில் அவர்களை இந்தியா கொண்டு வர சீன வெளியுறவு அமைச்சகத்திடம் இந்தியா கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வுகானிலிருந்து இந்தியா திரும்பிய 6 பேர் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு கேரளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சீனாவில் இருந்து ராஜஸ்தான் திரும்பிய இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரிகள் தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களால் உலக நாடுகளில் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவுகிறதா என்ற அச்சத்தில் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :