1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (17:05 IST)

ஹுண்டாய் சர்ச்சை: விளக்கம் கேட்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!

ஹுண்டாய் சர்ச்சை இடுகை விவகாரம் தொடர்பாக கொரிய தூதரிடம் விளக்கம் கேட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். 

 
பிப்ரவரி 5 ஆம் தேதியை பாகிஸ்தான் அரசு காஷ்மீர் ஒற்றுமை தினமாக கொண்டாடி வருகிறது. அந்த நாளில் ஹூண்டாய், கேஎப்சி, பீட்சா ஹட் உள்ளிட்ட நிறுவனங்களின் பாகிஸ்தான் கிளைகள் சமூக வலைதளங்களில் இட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்திய இறையாண்மையை குலைக்கும் விதமாக அந்நிறுவனங்கள் பதிவிட்டுள்ளதால் அந்நிறுவன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து ஹேஷ்டேகுகளை வைரலாக்கி வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்தன.
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள கொரிய தூதரை அழைத்து ஹுண்டாய் நிறுவன செயல்பாடு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் கேட்டிருக்கிறது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஹுண்டாய் பாகிஸ்தான் பகிர்ந்த சர்ச்சைக்குரிய பதிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதனால் இந்திய அரசாங்கம் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த பிரச்னை இந்தியாவின் ஒருமைப்பாடு சம்பந்தப்பட்டது, எனவே இதில் சமரசம் செய்ய முடியாது என்றும் அதில் கொரிய தூதரிடம் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஹுண்டாய் தனது ட்வீட்டில், "பாகிஸ்தானால் வழங்கப்படும் ‘காஷ்மீர் ஒற்றுமை நாள்’ மற்றும் ‘காஷ்மீரில் சுதந்திரத்திற்காக போராடுபவர்களை நினைவுகூர' ஆதரவு தர வேண்டும்" என குறிப்பிட்டு இருந்தது.