புதன், 1 பிப்ரவரி 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (15:26 IST)

எலான் மஸ்க்குக்கு தடை.. அம்பானிக்கு அனுமதி! – செயற்கைக்கோள் வழி இணையம்!

இந்தியாவில் செயற்கைக்கோள் வழி நேரடி இணைய வசதி அளிக்க முகேஷ் அம்பானி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அதிவேக இணைய மற்றும் தொலைதொடர்பு சேவையை வழங்கும் நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் உள்ளது. தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவையை அளித்து வரும் ஜியோ அடுத்து 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மேலும் அடுத்தக்கட்டமாக கேபிள் இணைப்புகள் இல்லாமல் நேரடியாக செயற்கைக்கோள் மூலமாக இணைய வசதி வழங்கும் முயற்சியிலும் ஜியோ நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நேரடி இணைப்பு வழங்கும் முறை மூலமாக கேபிள் வயர்கள் கொண்டு செல்ல முடியாத குக்கிராம பகுதிகளுக்கும் கூட அதிவேக இணைய வசதியை அளிக்க முடியும்.

பிரபல உலக தொழிலதிபரான எலான் மஸ்க் இந்த நேரடி செயற்கைக்கோள் இணைய வசதிக்காக பல ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்ணுக்கு அனுப்பி வருகிறார். இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை கொண்டு வர எலான் மஸ்க் கேட்டபோது இந்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில் தற்போது ஜியோ நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.