மோடி பிரதமர் ஆகாவிட்டால் தற்கொலை செய்வேன்: வக்பு வாரிய தலைவர் மிரட்டல்
மோடி மீண்டும் பிரதமர் ஆகாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று வக்பு வாரியத்தலைவர் வசீம் ரிஜ்வீ மிரட்டல் விடுத்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த வசீம் ரிஜ்வீ கூறியதாவது:
நம்முடைய தேசம் அனைத்து மதங்களையும் விட உயர்ந்தது. தேசிய நலன் குறித்து நான் எப்போது பேசினாலும், என்னை பிற்போக்கான முஸ்லிம்கள் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், எனது தலையை கொய்து விடுவதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
பிரதமர் மோடி மீது நம் நாட்டு மக்கள் அன்பு செலுத்தி வருகின்ரனர். இதனால் தேசத்துரோகிகள் இடையே பயம் நிலவி வருகிறது. நமது தேசத்தின் திறமைவாய்ந்த பிரதமராக இருக்கும் மோடி மீண்டும் பிரதமராகாமல், வேறு எந்த கட்சியின் தலைவர் பிரதமர் ஆனாலும் நான் தற்கொலை செய்து கொள்வேன். அதுவும் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் முன்பு தற்கொலை செய்து கொள்வேன். எனது துரோகிகளின் கைகளில் சிக்கி உயிரிழப்பதை விட தற்கொலை செய்து கொள்வது எவ்வளவோ மேல்' என்று அவர் கூறினார்.
வசீம் ரிஜ்வீ சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவிப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே டெல்லியில் உள்ள வரலாற்று சின்னமான ஹுமாயூன் சமாதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் முஸ்லீம்களின் சுடுகாடு கட்ட வேண்டும் என இவர் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது மட்டுமின்றி இவரது கருத்தை எதிர்த்து அவர் மீது பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் வழக்குகள் தொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.