வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (15:33 IST)

மோடியிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் – ராகுலைக் கண்டித்த உச்சநீதிமன்றம் !

ரஃபேல் விவகாரத்தில் மோடியைத் திருடன் எனக் கூறியதற்காக ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

பிரான்சிடமிருந்து, ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடி மீதும் பாஜக மீதும் குற்றஞ்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக முன்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என, தீர்ப்பளித்ததை அடுத்து இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ரபேல் வழக்கில், மனுதாரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், ராணுவ அமைச்சக அலுவலகத்தில் இருந்து திருடி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்ற குற்றாச்சாட்டை முன்வைத்து நீதிமன்றம் இந்த ஆவணங்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள கூடாது என மத்திய அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் நீதிமன்றம் ஆவணங்களை ஆதரங்களாக எடுத்துக்கொள்ளலாம் எனவும், ரபேல் ஊழல் வழக்கின் ஆவணங்கள் மீது விசாரணை விரைவில் தொடங்கும் எனவும் அறிவித்தது.

இதுகுறித்து அப்போது பிரச்சாரத்தில் இருந்த ராகுலிடம் கேள்வி எழுப்பியபோது ‘காவலாளி ஒரு திருடன் என நீதிமன்றமே சொல்லிவிட்டது’ எனக் கூறினார். இதையடுத்து நீதிமன்றத் தீர்ப்பில் அதுபோல எதுவும் இல்லை எனவும் தீர்ப்பை ராகுல் தனக்கு ஏற்றவாறு திரித்துக்கூறியுள்ளார் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து ‘ரஃபேல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின்போது பிரச்சாரத்தில் இருந்தபோது பேசிவிட்டேன். ஆனால், தீர்ப்பின் சாரம்சம் தெரியாமல் பேசிய என்னுடைய வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக்கொண்டன. என்னுடைய வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டவைக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என ராகுல் விளக்கம் அளித்தார்.

ஆனால் இதன் மீதான விசாரணையில் ‘ ராகுல் காந்தி இந்த விஷயத்தில் வருத்தம் தெரிவிப்பதற்குப் பதில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.