”மெக்கா” குறித்து பாஜக பிரபலம் சர்ச்சை ட்வீட்! – பழைய ட்வீட்டிற்கு இப்போ பதவி நீக்கம்!
இஸ்லாமிய புனித தலமான மெக்கா குறித்து பாஜக பிரபலம் சில ஆண்டுகளுக்கு முன் இட்ட பதிவுக்காக தற்போது பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் நுபுர் சர்மா, இஸ்லாமிய தூதரான நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம், போராட்டம் நடந்தது. அதை தொடர்ந்து நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய நபர் ஒருவர் தலை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் மேலும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஹரியானா பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அருண் யாதவ் கடந்த 2017ம் ஆண்டில் மெக்கா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்துள்ளார். அப்போது பெரிதாக கண்டுகொள்ளப்படாத அந்த ட்வீட்டை தற்போது சிலர் திடீரென வைரலாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்த பாஜக தலைமை அருண் யாதவ்வை பதவி நீக்கம் செய்துள்ளது. கடந்த சில காலமாக மாற்று மதத்தினர் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்களை பேசவோ பகிரவோ வேண்டாம் என பாஜக உறுப்பினர்களுக்கு பாஜக அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.