உரிமையாளர் பணம் ரூ.62 ஆயிரத்தை மென்று தின்ற ஆடு...
தனது உரிமையாளர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை ஆடு மென்று தின்ற விவகாரம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னவுஜ் மாவட்டத்திலுள்ள சிலுப்பூர் எனும் கிராமத்தில் வசிப்பவர் சர்வேஷ் குமார். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டை புதுப்பிப்பதற்காக செங்கல் வாங்க ரூ.66 ஆயிரம் பணத்தை தனது கீழாடையின் (டிரவுசர்) பாக்கெட்டில் வைத்திருந்தார். ரூ.66 ஆயிரம் முழுவதும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக மொத்தம் 33 நோட்டுகள் வைத்திருந்தார்.
வீட்டில் குளித்து விட்டு வந்து பார்க்கும் போது, தான் வளர்க்கும் ஆடு பாக்கெட்டில் இருந்த ரூபாய் நோட்டுகளை தின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியைடந்தார். எனவே, அவற்றின் வாயிலிருந்து ரூபாய் நோட்டுகளை பிடுங்க முயன்றார். ஆனால், அவருக்கு இரண்டு நோட்டுகள் அதாவது ரூ.4 ஆயிரம் மட்டுமே கிடைத்தது. மீதம் ரூ.62 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகளை ஏற்கனவே ஆடு தின்று முடித்திருந்தது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் “எனது ஆட்டிற்கு காகித உணவு என்பது மிகவும் பிடித்தமானது. எனவே, நான் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை அதை தின்று விட்டது. என்ன செய்ய முடியும்? அந்த ஆடு என் குழந்தை மாதிரி” என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.