எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து முதியவர் பலி; சார்ஜ் போட்டபோது நடந்த பயங்கரம்!
தெலுங்கானாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டபோது ஸ்கூட்டர் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் எரிபொருளில் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ப்ரொமோட் செய்யப்படுகின்றன. ஆனால் சமீப காலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த சில நாட்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பித்து எரிந்த சம்பவங்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பீதியை ஏற்படுத்தின.
இந்நிலையில் தெலுங்கானா நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட பிரகாஷின் தந்தை முயன்றபோது திடீரென வாகனம் வெடித்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தங்களிடம் நேரடியாக இந்த வாகனம் வாங்கப்படவில்லை என வாகனத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.