1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 மே 2019 (08:17 IST)

எம்.எல்.ஏக்கள் கட்சி மாற ரூ.10 கோடி பேரம்: துணை முதல்வர் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக 10 கோடி பேரம் பேசி வருவதாக  டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சமீபத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி எம்.எல்.ஏக்கள் 40 பேர் தங்கள் தொடர்பில் இருப்பதாக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாஜக தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை ரூ.10 கோடி கொடுத்து விலைக்கு வாங்க முயற்சிப்பதாக டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் பிரமுகருமான மனிஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார். 
 
பாஜகவிடம் நாட்டிற்கு தேவையான வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லாததால் அவர்கள் எம்.எல்.ஏக்கள், எம்பிக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சியின் எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என ஒரு நாட்டின் பிரதமர் கூறுவது வருத்தம் அளிப்பதாகவும் மனிஷ் சிசோடியா கூறியுள்ளார். 
 
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் அசோக் கோயல், 'ஆம் ஆத்மி கட்சி தோல்வி பயத்தால் இது போன்ற தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும்,  அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியிலுள்ள உட்கட்சி பூசலை சரிசெய்ய இயலாமல் பாஜகவை தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் கொண்டுவருவதாகவும் கூறியுள்ளார்.