உலக பிரச்சினைகள் தீர பசுக்கள் தான் தீர்வு!? – நீதிமன்றம் அளித்த வினோத தீர்ப்பு!
பசுக்கள் கடத்தப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த குஜராத் மாவட்ட நீதிமன்றம் பசுக்கள் குறித்து பேசிய தகவல் வைரலாகியுள்ளது.
வட இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பசுக்கள் இறைச்சிக்காக கடத்தப்படுவது, பசு இறைச்சி விற்பது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. அதை மீறியும் சிலர் பசுக்களை இறைச்சிக்காக கடத்துவது தொடர்கதையாக உள்ளது.
அவ்வாறாக பசுக்களை கடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சமீபத்தில் குஜராத் மாநிலத்தின் தபி மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தது.
இந்த வழக்கில் பசுமாடுகள் குறித்து பேசிய நீதிபதிகள் “உலகில் பசு வதையை நிறுத்தினால் பூமியில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சையே தாங்க வல்லவை. பல நோய்களுக்கு பசுவின் கோமியம் மருந்தாக உள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்து அறிவியல்பூர்வமற்றது என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edit By Prasanth.K