வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (13:03 IST)

கொரோனா வதந்தியை நம்பி ஊமத்தங்காய் விதை சாப்பிட்ட 11 பேர் கவலைக்கிடம்

கொரோனா வதந்தியை நம்பி ஊமத்தங்காய் விதை சாப்பிட்ட 11 பேர் கவலைக்கிடம்
கொரோனா வைரஸால் தினந்தோறும் உலகில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் கொரோனா குறித்த வதந்திகளை நம்பி ஒருசிலர் உயிரிழந்து வருவது பெரும் கவலையை அளித்துள்ளது. ஏற்கனவே சாராயம் குடித்தால் கொரோனா வராது என்ற வதந்தியை நம்பி நூற்றுக்கணக்கானோர் ஈரான் நாட்டில் உயிரிழந்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ஊமத்தங்காய் விதையைத் சாப்பிட்டால் கொரோனா வராது என்ற வதந்தியை நம்பி அந்த விதையை சாப்பிட்ட பதினொரு பேர் கவலைக்கிடமாக இருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆரம்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் பாபு என்பவர் சமூகவலைதளத்தில் ஊமத்தங்காய் விதையைத் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது என்பதை பார்த்து, இதனை நம்பிய அவர் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று ஊமத்தங்காய் விதைகளை எடுத்து வந்து அதை அரைத்து தண்ணீரில் கலந்து தனது குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுத்துள்ளார்
 
அவருடைய குடும்பத்தினர் மொத்தம் 11 பேர் ஊமத்தங்காய் விதை கலந்த தண்ணீரை குடித்த சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக மயங்கி விழுந்ததை அடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உமத்தங்காய் தண்ணீரை குடித்த 11 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
 
சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியை நம்பி யாரும் இது போன்ற காரியத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் கொரோனா வைரசுக்கு இதுவரை எந்த மருந்தும் கண்டு பிடிக்கவில்லை என்றும் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். மேலும் கொரோனா குறித்த வதந்தியை சமூக வலைத்தளத்தில் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்