செவ்வாய், 29 நவம்பர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (09:09 IST)

விலை குறைவான சீன ஸ்மார்ட்போன்களுக்கு தடை?? – மத்திய அரசு விளக்கம்!

இந்தியாவில் விலை குறைவான சீன ஸ்மார்ட்போன்களை தடை செய்ய உள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் 4ஜி, 5ஜி என தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டே செல்லும் அதே சமயம் புது புது மாடல் ஸ்மார்ட்போன்களும், ஸ்மார்ட்போன் கம்பெனிகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் பெரும்பங்கை சீன நிறுவனங்களான ரியல்மி, ஜியோமி, ஓப்போ, விவோ போன்றவை பெற்றுள்ளன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கொண்ட விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை இந்த நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ரூ.12 ஆயிரத்திற்கு குறைவான ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்க உள்ளதாகவும், இந்திய தயாரிப்புகளை வளர்த்தெடுக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும் தகவல்கள் வெளியானது.

ஆனால் மத்திய அரசு அப்படியான திட்டம் எதுவும் தங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விளக்கம் அளித்தபோது “வெளிநாட்டு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை. அவர்களது விற்பனை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு. அதுபோல இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.