வியாழன், 13 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 மார்ச் 2025 (12:15 IST)

தமிழ்நாட்டுல ஒருத்தனுக்கு ஒருத்தி.. ஆனா வட நாட்டுல 10 பேர்..? - அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!

தமிழக எம்.பிக்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் பேசியதை கண்டித்து அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் இடையே வாக்குவாதம் வலுத்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அதுகுறித்து கேள்வி எழுப்பிய தமிழக எம்.பிக்களை மத்திய அமைச்சர் நாகரிகமற்றவர்கள் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் அந்த வார்த்தையை திரும்ப பெற்றார், எனினும் அவரை கண்டித்து திமுக எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.

 

இந்நிலையில் வேலூரில் திமுக சார்பில் நடந்த 1072 கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இதுகுறித்து விமர்சித்து பேசிய தமிழக நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் “ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழனின் நாகரிகம். ஆனால் வடநாட்டவன் அப்படியல்ல. அங்கு 5 பேர் இருந்தாலும், 10 பேர் இருந்தாலும் ஒருத்தியையே திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவன் போய்விட்டால் மற்றொருவன் வருவான். இந்த நாற்றமெடுத்த நாகரிகம்தான் உங்களுடையது. தமிழனை தவறாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவான், ஜாக்கிரதை” என பேசியுள்ளார்.

 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் துரைமுருகன் பேச்சுக்கு சிலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். 
 

 

Edit by Prasanth.K