1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2020 (09:38 IST)

வீட்டிலிருந்தபடியே இலவச மருத்துவம் பெறலாம்! – மத்திய அரசின் புதிய செயலி!

கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளில் உள்ள நிலையில் உடல்நல குறைவுகளுக்கு வீடுகளில் இருந்தபடியே இலவசமாக டாக்டரின் ஆலோசனைகளை பெற மத்திய அரசு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மக்களே தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க தொடங்கியுள்ளனர். கூட்டம் கூடுவதை தவிர்க்க அரசு வலியுறுத்தி வரும் நிலையில் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் வருவதால் கூட்டம் அதிகரிப்பது கொரோனா தொற்று ஏற்பட்டு விட காரணமாகி விட கூடாது என்று மத்திய அரசு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிலிருந்தபடியே மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற இ-சஞ்சீவனி ஒபிடி என்ற வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இது செயலியாகவும் கூகிள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. இந்த தளத்தில் சென்று பெயர், மொபைல் எண் அளித்து பதிவு செய்து கொண்டால் ஊர் உள்ளிட்ட பிற விவரங்கள் கேட்கப்படும் அவற்றை பதிவு செய்தபின் டோக்கன் எண் வழங்கப்படும். பிறகு மருத்துவரை அணுகும் ஒவ்வொரு டோக்கன் எண்ணும், நாம் டோக்கன் வரிசையில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறோம் என்பதும் அதில் காட்டப்படும்.

நமது டோக்கன் முறை வந்ததும் நேரடியாக மருத்துவரிடம் இருந்து அலைபேசிக்கு அழைப்பு வரும். அதில் மருத்துவரிடம் தேவையான மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். தொடர் மருத்துவம் மேற்கொண்டு வரும் சர்க்கரை நோயாளிகள், இரத்த கொதிப்பு உள்ளவர்கள் தங்கள் மருந்து சீட்டுகள் மற்றும் இன்னபிற விவரங்களை ஆன்லை மூலமாகவே மருத்துவருக்கு அனுப்பி ஆலோசனைகள் பெறலாம்.

ஆலோசனைகள் அளித்த பிறகு மருத்துவர் அளிக்கும் மருத்துவ சீட்டினை பிரிண்ட் எடுத்து மருந்துகளை வாங்கி கொள்ளலாம். தளத்தில் அந்த மாநில மருத்துவர்கள் பலர் ஆலோசனைகள் வழங்க தயாராக காத்திருப்பதால் மொழி பிரச்சினையும் இல்லை. தமிழகத்தில் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் இதன்மூலமாக பயன்பெற்றுள்ளனர். https://esanjeevaniopd.in/ என்ற தளத்தில் சென்று டோக்கன் பெறலாம். ஆண்ட்ராய்டு செயலிக்கான லிங்க் இந்த தளத்தில் உள்ளது.