குடியரசு தின அணிவகுப்பில் உங்களுக்கு இடம் கிடையாது! – அப்செட் ஆன மம்தா!
குடியரசு தின விழா அன்று டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொள்ள மேற்கு வங்கத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய குடியரசு தினம் நாடு முழுவதும் ஜனவரி-26 அன்று விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. டெல்லியில் குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் வகையில் கண்கவரும் அணிவகுப்புகள் நடைபெறும். வெளிநாட்டு தலைவர்கள் முதற்கொண்டு பல தலைவர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில் இந்திய ராணுவம், மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள் சார்பில் அணிவகுப்புகள் நடத்தப்படும்.
இதில் மாநில அணிவகுப்புகளில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் கலாச்சாரம், பண்பாட்டை அனைவரும் அறியும் வகையில் அணிவகுப்பில் அலங்கார ஊர்திகளை ஏற்பாடு செய்வார்கள். இந்நிலையில் இந்த வருடம் 56 அலங்கார ஊர்திகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் 22 வகையான அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் 16 ஊர்திகள் மாநிலங்கள் சார்பிலும் 6 ஊர்திகள் அமைச்சகங்கள் சார்பிலும் இடம் பெறும் என கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. மேற்கு வங்க ஊர்தி பிரதிபலிக்கும் காட்சிகள் பாதுகாப்பு அம்சத்தை மீறும் வகையில் இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அனுமதி வழங்கவில்லை என கூறி வருகின்றனர்.