இந்தியா முழுவதும் நிலத்தடி நீரில் கலந்துள்ள நைட்ரேட் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பூமி 75 சதவீதம் நீரால் சூழப்பட்ட பகுதி என்றாலும் அதில் குடிக்க தகுந்த நன்னீர் 6 முதல் 10 சதவீதத்திற்குள்தான் இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் நல்ல தண்ணீருக்கு நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.
இதனால் அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் எதிர்காலத்தில் பெரிய ஆபத்தை சந்திக்க நேரும் என இயற்கை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தடி நீரை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் 15,259 பகுதிகளில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தபோது அவற்றில் 25 சதவீத ஆழ்துளை கிணறுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் உலக சுகாதார அமைப்பு அனுமதித்த அளவை விட (லிட்டருக்கு 45 மி.லி) அதிகமாக நைட்ரேட் நிலத்தடி நீரில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதனுடன் ப்ளோரைடு, ஆர்சனிக் ஆசிட் உள்ளிட்ட வேதியியல் பொருட்களும் கணிசமான அளவில் கலந்துள்ளது.
ஆபத்தான அளவில் நைட்ரேட் கலந்துள்ள மாநிலங்களாக ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. உத்தர பிரதேசம், ஜார்கண்ட், கேரளா மாநிலங்களில் நைட்ரேட் அளவு குறைவாக உள்ளது. அருணாச்சல பிரதேசம், கோவா, மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பாதுகாப்பானதாக உள்ளது.
இவ்வாறான நைட்ரேட் அதிகம் கலந்த தண்ணீரை பயன்படுத்துவதால் நீண்ட கால உடல் பிரச்சினைகள், குழந்தைகள் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. விவசாய நிலங்களில் நைட்ரேட் உரங்களை அதிகம் பயன்படுத்துவது, மக்கள் தொகையால் நகரங்களில் அதிகரித்துள்ள கழிவுநீர் வெளியேற்றம் உள்ளிட்ட பல காரணிகளால் நிலத்தடி நீர் பயன்படுத்த ஆபத்தானதாக மாறி வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Edit by Prasanth.K