மதுபானக் கொள்கை ஊழலுக்கு பா.ஜ.க.தான் காரணம் - சஞ்சய் சிங்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணைமுதல்வர் மணீஸ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் இவ்வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
இவ்வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில் மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதில், உண்மை என்னவென்றால் இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்-ஐ 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, சஞ்சய் சிங்குக்கு பிணை வழங்க எந்த ஆட்சேபனையும் இல்லை என அமலாக்கத்துறை கூறியதை அடுத்து, ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து, சிறையில் உள்ள முதல்வர் கெஜ்ரிவால் அங்கிருந்தபடி ஆம் அத்மி எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர்களுக்கும் அரசின் முக்கிய உத்தரவுகள் பிறப்பித்து வருகிறார்.
அவருக்குப் பதிலாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் தற்போது தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கெஜ்ரிவால் கூறுவதை ஊடகங்களுக்கும் கூறி வருகிறார்.
இந்த நிலையில் மதுபானக் கொள்கை ஊழலுக்கு பாஜகதான் காரணம் என்று சஞ்சய் சிங் பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது; டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க மிகப்பெரிய சதி நடந்துள்ளது. மதுபானக் கொள்கை ஊழலுக்கு பாஜகதான் காரணம். இந்த சதியில் அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் பங்கு உள்ளது. 5 மாத சித்திரவதைக்குப் பிறகு மகுண்டா ரெட்டி கெஜ்ரிவாலுக்கு எதிரான வாக்குமூலம் அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்என்று தெரிவித்துள்ளார்.