எதிர்க்கட்சினா எதிர்த்துக் கொண்டே இருப்பீர்களா? – காங்கிரஸ் நடவடிக்கைகளுக்கு பாஜக கண்டனம்!
கொரோனா பாதிப்புகளுக்கு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்து பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தக்க சமயத்தில் ஊரடங்கை அமல்படுத்தியிருக்காவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருந்திருக்கும் என நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசின் கொரோனா தடுப்பு செயல்பாடுகள் சரியாக இல்லை என அடிக்கடி காங்கிரஸ் பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள பாஜக கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் “கொரோனாவுக்கு எதிரான போரட்டத்தில் அரசுடன் நாட்டு மக்களும் இணைந்து கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் மத்திய அரசை குறைகூறி சண்டை போடுவதில்தான் மும்முரமாக உள்ளது. பிற நாடுகளை விட இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக உலக நாடுகள் கூறிவரும் நிலையில், காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தியும், அவரது குழுவினரும் தவிர யாரும் அரசை எதிர்க்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.