1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 ஜனவரி 2023 (13:18 IST)

தப்பிய சாராயக் கும்பல்; பச்சைக்கிளியிடம் விசாரணை! – பீகாரில் பரபரப்பு!

Parrot
பீகாரில் சாராயம் காய்ச்சிய கும்பல் தப்பியோடிய நிலையில் அவர்கள் குறித்து பச்சைக்கிளி ஒன்றிடம் விசாரிக்கப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

பீகாரில் முழு மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் சட்டத்திற்கு புறம்பாக பல பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த டிசம்பர் மாதத்தில் பீகாரின் சரண் மற்றும் சிவான் உள்ளிட்ட மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்ததால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாராயத்தின் தாக்கத்தால் பலர் கண் பார்வையை இழந்தனர்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி விஷ சாராயம் அருந்தியதில் 3 பேர் பலியான நிலையில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கயா மாவட்டத்தில் சாராய கும்பலை பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள குருவா பகுதியில் வீடு ஒன்றில் சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.


அவர்கள் உடனடியாக அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். ஆனால் அதற்குள் உஷாரான கள்ளச்சாராய கும்பல் வீட்டை விட்டு தப்பி சென்று விட்டனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது யாரும் இல்லாத நிலையில் அவர்கள் வளர்த்த கிளி ஒன்றை மறந்து விட்டு போயிருந்தனர்.

இதனால் அந்த கிளியிடம் அதிகாரி ஒருவர் விசாரணை மேற்கொண்டார். அந்த குற்றவாளிகள் எங்கே சென்றனர் என்பது குறித்து கேள்வி எழுப்பிய போது அந்த கிளி ’கடோரா.. கடோரா’ என கத்தியுள்ளது. கடோரா என்றால் உணவு வைக்கும் கிண்ணம் என்று அர்த்தம். எனினும் அவர் கேள்வி எழுப்பியதும் கிளி கடோரா என கத்திய சம்பவமும் வைரலாகியுள்ளன.

Edit by Prasanth.K