1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2022 (13:34 IST)

அக்னிபாத் திட்டம் - விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு!!

அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ சேவை செய்வதற்கான “அக்னிபாத் திட்டம்” மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர இளைஞர்கள், பெண்கள் 18வயது முதல் 23 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வழக்கமான ராணுவ உடற்தகுதி நிர்ணயங்களே அக்னிபாத் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். 
 
இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் வீரர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.4.76 லட்சம் ஆண்டு ஊதியமும், 4வது ஆண்டில் 6.92 லட்சம் ஆண்டு ஊதியமாகவும் வழங்கப்படும். 4 ஆண்டுகளை முழுவதுமாக முடிக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சேவை நிதியாக தலா ரூ.11.7 லட்சம் வழங்கப்படும்.
 
இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 23 வரை என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ராணுவத்தில் இருந்த படியே பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டன. இருப்பினும் இத்திட்டத்தை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு வரும் 24 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. careerindianairforce.cdac.in என்ற இந்திய விமானப்படை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.