ஆடை உற்பத்தி நிறுவனத்தில் வாயுக்கசிவு! 100 பேருக்கு மயக்கம், மூச்சு திணறல்!
ஆந்திராவில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட வாயுக்கசிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் அனகப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில் அங்கு செயல்பட்டு வரும் ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் இரவில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது அந்நிறுவனத்தின் எந்திரம் ஒன்றிலிருந்து திடீரென வாயு கசிந்துள்ளது. இதனால் பணியாளர்கள் வாந்தி, தலைச்சுற்றல், மயக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சுமார் 94 பெண் பணியாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.